Sunday, January 29, 2017

சாந்தம்

வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.

உலக பொது அருள்நெறி  சமய ஆண்டு :  31

ஜனவரி : 27

இன்றைய சிந்தனை :

சாந்தம்:

"நாம் உடலால் வேறுபட்டு இருக்கின்ற போதிலும் உள்ளம் என்ற நிலையால் நமக்கும் தெரியாமலே உலக மக்கள் அனைவரோடும் ஒன்றுபட்டே இருக்கின்றோம். ஆகவே நாம் சிந்தனை செய்யும் போது நமது அறிவின் கூர்மைக்கும் வேகத்திற்கும் ஏற்ப, பல அறிஞர்களோடு ஒன்றுபடுகிறோம். நமது அனுபவத்திற்கு எட்டாத விஷயங்கள் பலவற்றை நாம் அறிந்து கொள்வதே இதற்குச் சான்று.

இதே போன்று நாம் கோபம் அடையும் போது பல முரடர்களோடும் முட்டாள்களோடும் ஒன்றுபடுகிறோம். நாம் விரும்பாத, நாமே வெட்கப்படத்தக்க, நாமே வருந்தத்தக்க சில செயல்களை நாம் கோபத்தின் போது செய்து விடுவதே இதற்குச் சான்று ஆகும்.

நமது கோபத்தை அடக்கிக் கொள்ள நம்மால் முடியவில்லை. எனில் பிறர் மீது எப்படி, ஏன் கோபம் கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டும்.

நாம் சாந்தமாக இருக்கும் போதெல்லாம் நான் கோபத்தை ஒழித்து விடுவேன் என்ற திட சங்கற்பத்தை பல தடவை செய்து கொண்டு விழிப்போடு இருந்தால் முதலில் சில சமயங்களில் தோல்வி அடைந்தாலும் பிறகு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

வருமானம் கிடைக்கும் போது சேமித்து வைக்கும் பணம் தேவையான போது உதவியாவதைப் போல், சாந்தமாக இருக்கும் போது கொள்ளும் உறுதி, கோபம் எழும்போது வாழ்வில் ஒரு புதிய திருப்பம் உண்டாக முன் வந்து நிற்கும்."

வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment