Tuesday, January 17, 2017

வாழ்க வளமுடன்

"ஒரு மரம், விதையில் முழுமையாகச் சுருங்கி விடும்.  விதையை முளைக்கப் போட்டால் முழு மரமும் மலர்ச்சி பெற்றுவிடும்.  விதையில் மரத்தைப் பார்க்க முடியாது.  அந்த மாதிரி எந்தச் செயலைச் செய்தாலும் அது அலையாகிக் கருமையத்தில் இருப்பாகி விடுகிறது.  அம்மாதிரி எத்தனை விதமான செயல்களை இருப்பு வைத்திருக்கிறோமோ, அதுதான் குணம்.  நாம் பிறந்தபோதே நமது பெற்றோர்கள் மூலமாக வந்த இருப்பு என்று அதைச் சொல்லலாம். கருமையத்தில் நாம் இதுவரைக்கும் செய்த செயல்களும் அடங்கி இருக்கின்றன.  பல தலைமுறையாகக் கருத்தொடராக வந்த செயல்களும் அடங்கி இருக்கின்றன.  இவை அனைத்தும் சேர்ந்துதான் நமது அறிவாட்சித் தரமாக இருக்கிறது. 
.

கருத்தரிக்கக்கூடிய காலத்தில் ஆண், பெண், இருவருடைய உள்ளங்களும் இப்போதெல்லாம் எப்படி இருக்கின்றன?  முன் காலத்தில் தம்பதிகள் உறங்கப் போகும்போது கூட கடவுளை நினைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எண்ணி, வணங்கிக் கொண்டு உறங்கப் போவார்கள்.  இன்று தம்பதிகள் சினிமா பார்த்து விட்டு வந்திருப்பார்கள்.  அந்தச் சினிமாவில் வந்த எல்லாக் காட்சிகளும் உணர்ச்சி வயப்பட்ட காட்சிகளாகும்.  அதற்குத் தகுந்தவாறு எண்ணங்களையும், தரத்தையும் அந்தக் காட்சிகள் மாற்றிக் கொடுக்கக் கூடியனவாக உள்ளன. கணவன், மனைவி உறங்கப் போகின்ற போது அவற்றை மனதில் வைத்துக் கொண்டு, அந்த எண்ணத்தோடு இருக்கிறார்கள்.  இந்நிலையில் கருத்தரித்தால், அந்தக் குழந்தை எப்படி இருக்கும்?
.

சினிமாவில் கண்ட துப்பாக்கிச் சண்டை, வன்முறைக் காட்சிகள், காதல் காட்சிகள் ஆகியவையெல்லாம் ஜீவகாந்தத்தில் சுருங்கி இருக்கும்.  குழந்தை பிறந்து வளர வளர அதே போன்ற செயல்களைத்தான் செய்யும்.  மனிதனுடைய அமைப்பையும், மனதின் தன்மையையும் பற்றி நீங்கள் ஆராய வேண்டும் என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

**********************************************
.

"அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்
மூன்று வகையிலும் அறிவு வறுமை நிலவுகிறது".
.

பெற்றோர் தவம் பிள்ளைகள் நலம் :

"பெற்றோர்கள்வழி வாழ்க்கைமுறை தொடர்ந்து
பிள்ளைகளின் உடல்வளமும் அறிவும்மாகும்;
பெற்றோர்கள் நலம்அமைந்த மக்கள் வேண்டில்
பிழைநீக்கும் தவம்அறமும் ஆற்ற வேண்டும்."
.

"திருமணத்தின் முன்னதே அகத் தவத்தைத்
தொடங்கியவர் குழந்தைகளைப் பெற்ற போதும்
கருவினிலே அமைந்திட்ட தவத்தின் வித்து
களங்கத்தைப் போக்குவதில் திருப்பங் கொள்ளும்;
பெருநெறியாம் ஆன்மிக அறிவில் வாழும்
பெற்றோர்க்குப் பின்னர் வரும்குழந்தை எல்லாம்
திருநிலையாம் மெய்ப்பொருளை நாடிச் செல்லும்.
தெய்வ உணர்வைப் பெறுவார்; களங்கம் போகும்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment