Sunday, January 1, 2017

நல்வாழ்விற்கான வழி

வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.

உலக பொது அருள்நெறி  சமய ஆண்டு :  31

ஜனவரி : 2

இன்றைய சிந்தனை :

நல்வாழ்விற்கான வழி:

முற்றறிவாக உள்ளது இயற்கை. மனிதனானவன் இயற்கையில் ஒரு பகுதி. பகுதி அறிவிலிருந்து முற்றறிவை நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கும் ஒரு தத்துவந்தான் மனிதன்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் இயற்கையானது மனிதனுக்கு அறிவின் பெருக்கத்திற்குரிய பாடங்களை தந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு இயக்கமும், ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு அனுபோகமும் மனிதனுக்கு இயற்கையின் இரகசியத்தை, பெருமையை, மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

இந்த பாடங்களை உற்று நோக்கி, மதித்துப் பின்பற்றி வாழும் மனிதன் அவன் பிறவி நோக்கமாகிய முற்றறிவின் விரிவை நோக்கி உயர்ந்தும், சிறந்தும் விளங்கிக் கொண்டே இருக்கிறான்.

வாழ்வில் அவனுக்கு இனிமை, நிறைவு, மகிழ்ச்சி, அமைதி இவையெல்லாம் அமைகின்றன. இயற்கை தரும் பாடங்களை அலட்சியப்படுதுபவனோ, அறிவில் தேக்கமுற்று வாழ்வின் பயணத்திலே திசை மாறி துன்பம், நோய்கள், குழப்பம், சோர்வு இவற்றால் துன்பப்படுகிறான்.

வாழ்வின் நோக்கம் என்ன என்பதை மனிதன் அறிந்து கொள்ள வேண்டும். அந்த நோக்கத்திற்கு முரண்படாத நெறி நின்று வாழ வேண்டும். அவனே வாழ்வாங்கு வாழ்பவன். அவனால் தான் மனித சமுதாயம் நலம் பெறுகிறது. மனித சமுதாயத்தால் அவன் போற்றப்படுகிறான்.

வாழ்வாங்கு வாழும் நெறியை விஞ்ஞான ரீதியாக விளக்கி நல்வாழ்வு பெற உதவும் கலைதான் "மனவளக்கலை".

வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment