Wednesday, January 18, 2017

சாதனை தான் பயன் தரும்:

வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.

உலக பொது அருள்நெறி  சமய ஆண்டு :  31

ஜனவரி 19 :

சாதனை தான் பயன் தரும்:

"அறிவின் வளர்ச்சிக்கு மூன்று படிகள் உள்ளன. அவை :

1) நம்பிக்கை (Faith)

2) விளக்கம்  (Understanding)

3) முழுமைப்பேறு (Realization)

உடலைக் காக்கும் நெறியிலும் மூன்று ஒழுங்காற்றல் வேண்டும். அவை :

1) ஒழுக்கம் (Morality)

2) கடமை (Duty)

3) ஈகை (charity)

இத்தகைய தெளிந்த நிலையில் மனிதன் வாழ்ந்து முழுமை பெற வேண்டுமெனில் கீழ்க்கண்ட ஏழு விதிகளை நன்கு உணர்ந்து ஆற்ற வேண்டும். அவை:

1) வாழ்வின் நோக்கம், தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2) தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும், வாய்ப்புகளையும் கணித்துக் கொள்ள வேண்டும்.

3) இயற்கையின் ஒழுங்கமைப்பையும் அதன் ஆற்றலின் விளைவான தவறற்ற காரண-விளைவு விதியையும் உணர்ந்து கொண்டும் மதித்தும் நடக்க வேண்டும்.

4)வாழ வேண்டிய முறையையும் ஆற்ற வேண்டிய செயல்களையும் வரிசையாகத் தொகுத்துக் கொள்ள வேண்டும்.

5) இத்தகைய வாழ்வுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள உடல் வலிமையையும், திறமையையும், அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். இவற்றிற்கு முறையான உடல் பயிற்சி, உளப்பயிற்சி, சிந்தனை இவற்றைப் பழகிக் கொள்ள வேண்டும்.

6) விழிப்போடும், விடாமுயற்சியோடும் எண்ணம், சொல், செயல் இவற்றை பயன்படுத்த வேண்டும்.

7) அவ்வப்போது ஏற்படும் தவறுகளை அகத்தாய்வு ( Introspection), செயல் திருத்தம் என்ற இரண்டு வழிகளாலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த ஏழு விதிகளை நன்குணர்ந்து மனிதன் அறிவில் வளர்ச்சி பெற வேண்டும்; உடலையும் நன்கு காத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய வாழ்வின் மூலமே மனிதன் பிறர்க்குப் பாரமாக இல்லாமலும், பிறருக்கு உதவியாகவும் இருந்து கொண்டே தானும் நிறைவோடும், மகிழ்ச்சியோடும் வாழலாம். முயல்க!  சாதனை தான் பயன்தரும்."

வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment