*வாழ்க்கை மலர்கள்: டிசம்பர் 27*
*யோகப்பயிற்சி*
தோற்றப் பொருட்களைப் பற்றி அறியும் விஞ்ஞான அறிவோடு, தோன்றாத மறைபொருட்களாக உள்ள மனம், உயிர், மெய், இம்மூன்றையும் அறிய வேண்டும். இதற்கு முறையான உளப்பயிற்சியே அகத்தவம் [தியானம்]. இது ஒன்றுதான் சிறந்த வழி. இத்தகைய உளப்பயிற்சியினால் அறிவானது கூர்மையும், அமைதியும், உறுதியும், தெளிவும் பெறும்; பேரியக்க மண்டலம் முழுவதையையும் தனக்குள்ளாக்கி விரிந்து நின்று ஆழ்ந்து சிந்திக்கும் திறன் பெறுகிறது. இதனால் எல்லாப் பொருட்களின் தன்மைகளையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
பிற உயிர் பெறும் இன்ப துன்ப உணர்வுகளின் தன்மையை ஊடுருவி நின்று அறியும் நுட்பமும், உயிர்கள் படும் துன்பத்தை இயன்ற வரை போக்க உதவும் தகைமையும், எவ்வுயிர்க்கும் துன்பம் விளைக்காமல் தனது தேவை, விருப்பம் இவற்றை நிறைவு செய்து கொள்ளும் ஒழுக்கப் பண்பும் இயல்பாக உருவாகிவிடும். எனவே, யோக சாதனையால் மனிதன் அறிவிலும், செயலிலும் சிறந்து விளங்க முடியும். இவையெல்லாம் பொதுவாக யோகப் பயிற்சியினால் மனிதனுக்குக் கிடைக்கும் பெரும் பயன்கள்.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
www.facebook.com/vethathiri.gnanam
No comments:
Post a Comment